தமிழகத்தில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, அதிமுகவைச் சேர்ந்த முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதன் காரணமாக, திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்த்து அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்த நான்கு தொகுதிகளையும் கூட்டி, தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன.
இந்த ஐந்து தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் விரைவில் இடைத்தேர்தலை அறிவிக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த நட்சத்திர தொகுதியான திருச்சி கிழக்கில் தவெக நேரடியாக களம் காணுமா அல்லது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், “முதலமைச்சர் விஜய் நின்று இமாலய வெற்றி பெற்ற தொகுதி என்பதால், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பளிக்காமல் தமிழக வெற்றிக் கழகமே நேரடியாகப் போட்டியிடும்” என்று அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் அமைச்சரின் இந்த அறிவிப்பு தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
