உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் பமோரா அருகே ரோட்டில், கார் போனட்டில் தொங்கிய மனைவியைப் பொருட்படுத்தாமல் கணவர் சுமார் 100 மீட்டர் தூரம் காரை வேகமாக ஓட்டிச் சென்ற கொடூரச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரேலியைச் சேர்ந்த கோதாவரி (38) என்ற பெண், தனது கணவர் நேத்ரபால் சிங் (42) என்பவர் சாதனா (32) என்ற மற்றொரு பெண்ணுடன் காரில் செல்வதைக் கண்டு தேவ்சரா சந்திப்பில் காரை வழிமறித்துள்ளார்.

ஆனால், நேத்ரபால் காரை நிறுத்தாமல் ஓட்ட முயன்றதால், கணவரைத் தடுக்கும் நோக்கில் கோதாவரி காரின் முன்பக்க போனட் மீது ஏறிக்கொண்டார். எனினும், மனைவியின் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் நேத்ரபால் காரை வேகமாக இயக்க, கோதாவரி போனட்டைக் கட்டியபடி உயிருக்குப் போராடியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள், காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்து அந்தப் பெண்ணை காயங்களுடன் மீட்டனர்.

இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் கோதாவரி போலீசில் அளித்துள்ள புகாரில், தனது கணவருக்கும் சாதனா என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், இதைக் தட்டிக்கேட்ட போது கணவர் தன்னைத் தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கார் நிறுத்தப்பட்ட போது காரில் இருந்த சாதனா தன்னை அடித்து, கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சாதனா, தான் அலுவலகத்தில் இருந்து திரும்பும்போது நேத்ரபாலிடம் ‘லிப்ட்’ மட்டுமே கேட்டதாகவும், கோதாவரி தன் மீது வீண் பழி சுமத்துவதாகவும் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து நேத்ரபால் சிங் மற்றும் சாதனா ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.