பழைய பொருட்களை விற்றுவிட்டுப் புதிய பொருட்களை வாங்கும் இக்காலக் கலாசாரத்திற்கு மத்தியில், ராஜஸ்தான் மாநிலம் பார்மேர் மாவட்டம் கர்டாலி நாடி கிராமத்தில், தாத்தாவின் நினைவாக 50 ஆண்டுகள் பழமையான பாரம்பரியக் குடிசை வீட்டைப் பேரன் ஒருவர் ஹைட்ரா கிரேன் (Hydra Crane) மூலம் பத்திரமாக வேரோடு பெயர்த்து வேறொரு இடத்திற்கு மாற்றியுள்ளார். புர்காராம் என்ற அந்த இளைஞரின் தாத்தா கட்டிய இந்தக் குடிசை வீட்டின் அடித்தளம், கறையான்கள் அரித்ததால் பலவீனமடைந்து இடியும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

புதிய குடிசை அமைக்க ரூ.80,000 வரை செலவாகும் என்பதோடு, அதனை அமைக்க 50-க்கும் மேற்பட்ட ஆட்களின் கூட்டு உழைப்பும் தேவைப்படும். ஆனால், பணத்தை விடத் தனது தாத்தாவின் கடைசி அடையாளத்தைப் பாதுகாக்க விரும்பிய புர்காராம், வெறும் 6,000 ரூபாய் செலவில் ஹைட்ரா கிரேன் உதவியுடன் அந்தக் குடிசையை அப்படியே தூக்கிப் பாதுகாப்பான மற்றொரு இடத்திற்கு மாற்றியுள்ளார்.

பாலைவனப் பகுதியான இங்கு கோடைகாலத்தில் வெப்பம் 45 டிகிரி செல்சியஸைத் தாண்டினாலும், மண் சுவர்கள், காய்ந்த புற்கள் மற்றும் சிறு குச்சிகளைக் கொண்டு பாரம்பரிய முறைப்படி வேயப்பட்ட இந்தக் குடிசை வீட்டிற்குள் ஏசி அல்லது மின்விசிறியின் தேவையே இருக்காது என்றும், இயற்கை முறைப்படி வீடு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் என்றும் புர்காராம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தக் குடிசையின் கூரையைச் சீரமைத்தால் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் வரை இது எவ்விதப் பாதிப்புமின்றித் தாங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பாரம்பரியக் குடிசை கட்டும் கலை தற்போது அழிந்து வரும் சூழலில், தாத்தாவின் பாசத்திற்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பழமையைப் புதுப்பித்த பேரனின் இந்த முயற்சி கிராம மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.