திடீரென்று சாக்லேட், சிப்ஸ் அல்லது இனிப்பு வகைகளைச் சாப்பிட வேண்டும் போல் தோன்றும் தீவிரமான ஆசை என்பது வெறும் நாவின் சுவைக்கான தேடல் மட்டுமல்ல அது நமது உடல் தனக்குத் தேவையான ஏதோவொரு ஊட்டச்சத்து குறைபாட்டை வெளிக்காட்டும் ஒரு முக்கிய எச்சரிக்கை என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்குகின்றனர்.

அன்றாட வாழ்க்கையில் பலரும் இந்த உணர்வைச் சாதாரணமான பசி அல்லது தின்பண்டங்கள் மீதான ஆசையாக மட்டுமே கடந்து விடுகின்றனர்.  ஆனால், உடலுக்குள் ஏற்படும் குறிப்பிட்ட தாதுக்கள் மற்றும் வைட்டமின்களின் பற்றாக்குறையே இதுபோன்ற குறிப்பிட்ட உணவுகளின் மீதான ஈர்ப்பை உருவாக்குகிறது.

உதாரணத்திற்கு, திடீரென சாக்லேட் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக எழுந்தால், உடலில் மெக்னீசியம் சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். மெக்னீசியம் தான் தசைகளின் இயக்கம், நரம்பு மண்டலச் செயல்பாடு மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு அத்தியாவசியமான ஒன்றாகும்.

அதேபோல, காரமான, மொறுமொறுப்பான சிப்ஸ் அல்லது உப்பு நிறைந்த நொறுக்குத் தீனிகளை மனம் தேடுகிறது என்றால், உடலில் சோடியம் அளவிலோ அல்லது நீரேற்றத்திலோ குறைபாடு இருக்கலாம். மேலும், தொடர்ந்து இனிப்புப் பண்டங்களைச் சாப்பிடத் தோன்றுவது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீரற்றதாக இருப்பதையோ அல்லது குரோமியம் துத்தநாகம் ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறையையோ குறிக்கிறது.

எனவே, இதுபோன்ற உணவுகள் மீது தீராத ஆசை ஏற்படும் போது, ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளை உடனடியாகச் சாப்பிட்டு அந்தப் பசியைத் தணிப்பதற்குப் பதிலாக, உடலுக்குத் தேவையான உண்மையான ஊட்டச்சத்துக்களை வழங்குவது அவசியமாகும். சாக்லேட் ஏற்படும் போது அடர்ந்த டார்க் சாக்லேட், கொட்டைகள் அல்லது விதைகளைச் சாப்பிடலாம்.

உப்புச் சுவையைத் தேடும் போது இளநீர், எலுமிச்சை சாறு அல்லது காய்கறி சாலட்களை உட்கொள்ளலாம். உடலின் தேவையைப் புரிந்து கொண்டு சரியான ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் இந்தத் தேவையற்ற cravings-ஐக் கட்டுப்படுத்தி, உடலையும் மனதையும் ஆரோக்கியமாகப் பராமரிக்க முடியும்.