மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டம், தேவனி தாலுகாவில் உள்ள பாம்ப்ளி கிராமத்தைச் சேர்ந்த காசிநாத் கெய்க்வாட் என்ற விவசாயியின் குடும்ப நிலை, ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையின் போது, எதிர்பாராதவிதமாக இடி மின்னல் தாக்கி இவர்களது விவசாய மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

வறுமையின் பிடியில் இருக்கும் அந்த விவசாயியால், உடனடியாக மற்றொரு மாட்டை விலைக்கு வாங்குவதற்கான பொருளாதார வசதி இல்லை. ஆனால், பருவகால விவசாயப் பணிகளைத் தாமதிக்க முடியாது என்பதால், மாற்று வழியின்றி மாடு பூட்டப்பட வேண்டிய ஏர்க்காலில் தனது மனைவி ஹவ்சாபாய் கெய்க்வாட்டைப் பூட்டி, நிலத்தை உழும் கொடூர நிலைக்கு அந்த விவசாயி தள்ளப்பட்டுள்ளார்.

அன்னமிடும் விவசாயக் குடும்பத்தின் இந்த விபரீத நிலையை, அம்மாநிலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் (MLA) ரோஹித் பவார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள விவசாயியின் மனைவி ஹவ்சாபாய், மாடு இறந்த பிறகு அரசு அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றும் தங்களுக்கு இதுவரை எவ்வித நிதி உதவியும் கிடைக்கவில்லை என்றும், மனித உடலால் ஏர் இழுப்பது சொல்லொணா உடல் ரீதியான வேதனையைத் தருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டின் முதுகெலும்பான விவசாயக் குடும்பம் விலங்குகளுக்கு நிகராக மாறும் அவலத்தைத் தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளின் துயரத்தைப் போக்க நிபந்தனையற்ற முழு கடன் தள்ளுபடியை அரசு அறிவிக்க வேண்டும் என்றும் ரோஹித் பவார் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.