இன்றைய அவசரக் காலகட்டத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்வது என்பது பெரும்பாலான குடும்பங்களில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த லாவண்யா வதனம் என்ற பெண், வேலைக்கும் குடும்பத்திற்கும் இடையே உள்ள சமநிலையைத் தற்காலப் பெற்றோர் எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்துச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ ஒன்று பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

தனது பள்ளிச் செல்லும் மகன், நண்பனின் பிறந்தநாளுக்காக மாலையில் சீக்கிரம் வந்து வாழ்த்து அட்டை (Greeting card) செய்ய உதவுமாறு அன்போடு கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அலுவலகத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட கூடுதல் பணிச்சுமையால் தன்னால் சொன்னபடி குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்கு வர முடியவில்லை என்றும் அவர் பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Lavanya Vaddanam (@justherthoughts_lav)

தாமதமாக வீட்டிற்குத் திரும்பியபோது, தனது மகன் சோகமாக அமர்ந்திருந்ததைக் கண்டு காரணத்தைக் கேட்டபோது, அவன் கேட்ட ஒரு கேள்வி லாவண்யாவை நிலைகுலையச் செய்துள்ளது. “அம்மா, உனக்கு நான் முக்கியமா? இல்லை உன் ஆபீஸ் முக்கியமா?” என்று அந்த சிறுவன் நிராகரிப்புடன் கேட்க, பதறிப்போன லாவண்யா, “எப்போதும் நீதான் முக்கியம்” என்று சமாதானம் செய்துள்ளார். பின்னர் இரவு அவனருகில் சென்று கோபப்படாமல், பொறுமையுடன் தனது அலுவலகப் பொறுப்புகள் குறித்தும், வாக்குறுதியைத் தவறவிட்டதற்கான சூழல் குறித்தும் அவனுக்குப் புரியும் மொழியில் பக்குவமாக விளக்கியுள்ளார்.

மேலும் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் சூழ்நிலையைத் தவறாகப் புரிந்துகொண்டு தனிமைக்குள்ளாகாமல் இருக்க, வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் நண்பர்களைப் போலத் தங்களின் பணிச்சூழல் மற்றும் பொறுப்புகள் குறித்து வெளிப்படையாகப் பேசிப் புரிய வைக்க வேண்டும் என்ற லாவண்யாவின் இந்த அறிவுரைக்கு இணையவாசிகள் மத்தியில் பெரும் ஆதரவும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.