ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டம் தெந்துலிகுந்தி வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) மனோஜ் பனிகிரஹி, கடுமையான கோடைகால வெயிலில் தவித்த மூதாட்டி ஒருவருக்குச் செய்த மனிதாபிமான உதவி சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. கௌடகுடா கிராமத்தைச் சேர்ந்த சுந்தேய் பாக் என்ற மூதாட்டி, மருத்துவப் பரிசோதனைக்காக அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
பரிசோதனை முடிந்து வீடு திரும்ப வாகனங்கள் ஏதும் கிடைக்காததால், மதிய நேர வெயிலில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டிற்கு அவர் நடந்தே செல்லத் தொடங்கியுள்ளார். அப்போது அவ்வழியாக அரசுப் பணி நிமித்தமாகத் தனது காரில் வந்த பி.டி.ஓ மனோஜ் பனிகிரஹி, மூதாட்டியின் நிலையைப் பார்த்துக் காரை நிறுத்தி, அவரைத் தனது காரிலேயே ஏற்றிப் பத்திரமாக அவரது வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார்.
காரில் செல்லும்போது மூதாட்டியின் குறைகளைக் கேட்டறிந்த அதிகாரி, அவருக்கு அரசின் ஓய்வூதியம் மற்றும் இலவச அரிசி ஆகியவை முறையாகக் கிடைப்பதை உறுதி செய்தார். மேலும், மூதாட்டியின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் அவருக்கு உடனடியாக மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வழங்கவும், சுகாதாரத் துறையினர் மூதாட்டியின் வீட்டிற்கே சென்று தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.
மேலும் அரசு அதிகாரியின் இந்த மனிதாபிமான செயலும், பொறுப்புணர்வும் வீடியோவாக வெளியாகிப் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், மற்ற அரசு அதிகாரிகளுக்கும் இது ஒரு சிறந்த முன்மாதிரி எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
