அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தற்போது உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை மையமாகக் கொண்ட மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. சர்வதேச அளவில் இருபது சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் இந்தப் பாதையை ஈரான் மூடியுள்ளதால், உலகெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பாதையை மீண்டும் திறக்க ஈரான் மறுத்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தங்களே இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக அதிரடியாக அறிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கும் அதிகாரம் இனி அமெரிக்காவிற்கே உண்டு என்று வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் உடனடியாகப் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குச் சம்மதிக்காவிட்டால் அந்த நாட்டின் எரிசக்தி நிலையங்கள், பாலங்கள் மற்றும் இரயில்வே கட்டமைப்புக்கள் மீது மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானில் உள்ள அனைத்துப் பாலங்களையும் தகர்த்துவிடுவோம் என்றும் இஸ்ரேல் உதவியுடன் அந்நாட்டின் போக்குவரத்து வசதிகள் முடக்கப்படும் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். ஈரான் சில நிபந்தனைகளை முன்வைத்த போதிலும் அவற்றை ஏற்க அமெரிக்கா மறுத்துவிட்டது.

இதனால் அடுத்த சில மணி நேரங்களில் ஈரானின் முக்கியப் பொருளாதார மையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தக்கூடும் என்பதால் மேற்காசியாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.