ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் காஜுவாக்கா பகுதியில், எல்.ஐ.சி முகவராகப் பணியாற்றி வரும் வெங்கட அப்பாராவ் என்பவர் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீச்சு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, அப்பாராவ் தனது வீட்டின் வெளியே அமர்ந்து கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்து வந்த நபர் ஒருவர் திடீரென அவர் முகத்தில் ஆசிட்டை ஊற்றிவிட்டுத் தப்பி ஓடினார்.
வலியால் அலறிய அவரது சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர், அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் தொப்பி மற்றும் முகக்கவசம் அணிந்த நபர் ஒருவர் பாட்டிலுடன் வந்து தாக்குதல் நடத்துவது தெளிவாகத் தெரிகிறது. அப்பாராவிற்கு முகம், கழுத்து மற்றும் கைகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பழைய பகை அல்லது தொழில்முறை போட்டி காரணமாக இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
