ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில், தனது மகனின் நோயைக் குணப்படுத்துவதற்காக 13 வயது மகளையே நரபலி கொடுத்த தாயின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரேஷ்மி தேவி என்ற அந்தப் பெண், தனது மகனுக்கு நீண்ட நாட்களாக இருந்த உடல்நலக் குறைபாட்டைத் தீர்க்க ஒரு கன்னிப் பெண்ணைப் பலியிட வேண்டும் என்ற பெண் சாமியாரின் பேச்சை நம்பியுள்ளார்.

இதற்காகத் தனது காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டிய அவர், கடந்த மார்ச் 24 அன்று நள்ளிரவில் மூங்கில் காட்டிற்குச் சிறுமியை அழைத்துச் சென்று கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். மகளின் ரத்தத்தைச் சேகரித்து மாந்திரீக பூஜை செய்து இந்த நரபலியை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.

இந்தக் கொலையை மறைக்க, இது ஒரு பாலியல் வன்கொடுமை போலக் காட்டும் நோக்கில் பக்கத்து வீட்டுக்காரர் மீது ரேஷ்மி தேவி பொய்ப் புகார் அளித்து நாடகமாடியுள்ளார். ஆனால், காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் தாயின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

இறுதியில் உண்மை வெளிப்பட்டதையடுத்து, அந்தத் தாய், அவரது காதலன் மற்றும் நரபலி கொடுக்கத் தூண்டிய பெண் சாமியார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு தாயே தன் மகளை மூடநம்பிக்கையால் பலி கொடுத்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.