பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியின் விசித்திரமான பாலியல் கோரிக்கைகள் மற்றும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். வழக்கமாகப் பெண்கள் தங்கள் கணவன்மார்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிப்பதைப் பார்த்திருப்போம், ஆனால் இங்கு ஒரு கணவர் தனது மனைவியின் பாலியல் தொல்லைகளைத் தாங்க முடியாமல் அமிர்தஹள்ளி காவல் நிலையத்தை நாடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது மனைவி தன்னை விடாமல் பாலியல் உறவுக்கு வற்புறுத்துவதோடு, தனது தோழியுடனும் உடல் ரீதியான தொடர்பு வைத்துக்கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக அந்த நபர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது மனைவி ஆபாச வீடியோக்களை அனுப்பி தன்னைத் துன்புறுத்துவதாகவும், திருமணத்திற்கு முன்பு தனக்கிருந்த உறவுகளைப் பற்றிப் பேசி மனரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மது அருந்திவிட்டு நண்பர்களுடன் சுற்றுவது தற்காலத்தில் சாதாரண விஷயம் என்று கூறி தன்னைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தான் பாலியல் உறவுக்குச் சம்மதிக்காத நேரங்களில் தன்னை மிகக் கொடுமையாகப் படுத்துவதாகவும், அவரிடம் கொடுத்த நகைகளைத் திருப்பித் தராமல் ஏமாற்றுவதாகவும் அந்த கணவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பெங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
