மத்தியப் பிரதேசத்தின் கட்னி முர்வாரா ரயில் நிலையத்தில், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிப்பறையில் பச்சிளம் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரித்வாரிலிருந்து பூரி நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த ரயிலின் S-4 பெட்டியில் பயணித்த பயணி ஒருவர், கழிப்பறைக்குச் சென்றபோது தரையில் ஒரு குழந்தை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்.
ஒரு சிறிய போர்வையில் சுற்றப்பட்டிருந்த அந்தப் பச்சிளம் குழந்தை, கழிப்பறைத் தரையில் கைகால்களை அசைத்துக் கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை கலங்கச் செய்துள்ளது.
தகவலறிந்த ரயில்வே போலீஸார் உடனடியாக விரைந்து வந்து குழந்தையை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அந்தப் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், S-4 பெட்டியில் பயணித்தவர்களின் பட்டியல் மற்றும் ரயில் நிலையத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். குழந்தையைக் கழிப்பறையில் வீசிச் சென்ற கல்நெஞ்சக்காரர்கள் யார் என்பது குறித்து சக பயணிகளிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
