அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் எடுத்த முயற்சிகளுக்கு ஈரான் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. போர் நிறுத்தத்திற்காக அமெரிக்கா அனுப்பிய 15 அம்சத் திட்டத்தைப் பாகிஸ்தான் வழியாகப் பெற ஈரான் மறுத்துவிட்டது. பாகிஸ்தானை தங்களால் நம்ப முடியாது என்றும், இந்தப் போர் நிறுத்த விவகாரத்தில் இந்தியா ஒரு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றும் ஈரான் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தத்திற்கான பெருமையை அபகரிக்கவே பாகிஸ்தான் துடிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரான், இந்தியா தங்களின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடு என்பதால், பேச்சுவார்த்தைகளில் இந்தியா பங்கேற்பதை வரவேற்பதாகக் கூறியுள்ளது.

மறுபுறம், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து போன்ற இஸ்லாமிய நாடுகளை ஒன்றிணைத்து இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது. ஆனால், ஈரானின் இந்த அதிரடிப் பதில் பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் ஏற்கனவே அமைதிக்குத் தயாராகிவிட்டதாக டொனால்ட் டிரம்ப் கூறி வரும் நிலையில், அதை ஈரான் மறுத்துள்ளதுடன் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இந்த இக்கட்டான சூழலில், பாகிஸ்தானை விட இந்தியாவின் மத்தியஸ்தத்தையே ஈரான் பெரிதும் விரும்புவது சர்வதேச அரசியலில் கவனித்தக்க ஒன்றாக மாறியுள்ளது.