மதுரையில்  த.வெ.க. அமைச்சர் நிர்மல்குமார் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பு, தமிழக அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.

மதுரை மாநகராட்சி ஊழல் புகாரில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நகரின் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், விதிகளை மீறி செயல்பட்ட கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதிமுக, பாஜகவின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள் என்றும், அங்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடைமுறை கடைபிடிக்கப்பட்டதோ அதுவே தொடரும் என்றும்,

இதில் எந்த ஒரு மதவாத சக்தியையும் த.வெ.க. அரசு தலையிட விடாது என்றும் அதிரடியாகக் குறிப்பிட்டார். முதல்வர் விஜய் செய்தியாளர்களைச் சந்திப்பது குறித்த கேள்விகளுக்கு, “செய்தியாளர்களைச் சந்தித்து தான் அரசு நடத்த வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை; எப்போது தேவையோ அப்போது முதல்வர் செய்தியாளர்களைச் சந்திப்பார், அவர் தொடர்ந்து மக்களைச் சந்தித்துவருகிறார்” எனப் பதிலளித்தார்.

இறுதியாக, ஹார்டு டிஸ்க் திருடு போன விவகாரத்தில் செந்தில் பாலாஜி ஆஜராவது குறித்துப் பேசிய அமைச்சர், “அவர் சொல்லித் தான் ஹார்டு டிஸ்க் திருடப்பட்டதாக யாராவது சொன்னார்களா? விசாரணை முடிவில் உண்மை தெரியவரும், அவருக்கு ஏன் இவ்வளவு பயம் எனத் தெரியவில்லை” என்று சாடினார்.