பஞ்சாபின் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதியோர் ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்காக, கைரேகை சரிபார்ப்பு மற்றும் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக மூதாட்டி ஒருவரை அவரது பேரன் தள்ளுவண்டியில் வைத்து வங்கிக்கு அழைத்து வந்த நெஞ்சை உருக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மேலும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தனது பாட்டியைத் தள்ளுவண்டியில் படுக்க வைத்து பேரன் வங்கிக்குக் கொண்டு வந்ததை கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வங்கியில் பணம் எடுக்க, சம்பந்தப்பட்ட நபர் நேரில் வரவேண்டும் என்ற கடுமையான விதிமுறையே, இந்த இக்கட்டான நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம், முதியவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் அரசுச் சலுகைகளைப் பெறுவதில் சந்திக்கும் பெரும் சிரமங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருந்தாலும், இத்தகைய அடிப்படைத் தேவைகளுக்காக முதியவர்கள் படும் அவஸ்தைகள் அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தையே காட்டுகின்றன.
