பஞ்சாப் மாநிலம் நவன்ஷஹர் நகரின் கர்சங்கர் பகுதியில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 15 வயது பெற்ற மகளை தாயும் அவளது கள்ளக்காதலனும் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்து, சடலத்தை சூட்கேசில் அடைத்து தீ வைத்து எரித்த நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மே 29 அன்று தனது 15 வயது மகள் திடீரென காணாமல் போய்விட்டதாகவும், யாரோ அடையாளம் தெரியாத நபர் அவளைத் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றுவிட்டதாகவும் கூறி தாய் உஷா ராணி போலீசில் நாடகமாடிப் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், உஷா ராணியின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான குர்விந்தர் சிங் (23) என்ற வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போதுதான், அந்த படுகொலை அம்பலமானது.

அதாவது கைது செய்யப்பட்ட குர்விந்தர் சிங்கிடம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், சிறுமியின் தாய் உஷா ராணிக்கும் அவருக்கும் இடையே நீண்ட நாட்களாகத் தகாத உறவு இருந்தது தெரியவந்தது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த 15 வயது மகள், தாயின் இந்த நடத்தையைக் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். இதனால் கள்ளக்காதல் ஜோடிக்கு இடையே அடிக்கடி சண்டை வெடித்துள்ளது. சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட குர்விந்தர் சிங், வீட்டிற்குள் புகுந்து அவளது கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

பின்னர், கொலையை மறைப்பதற்காகச் சிறுமியின் சடலத்தை ஒரு பெரிய சூட்கேசில் திணித்து, அதைத் தனது பைக்கின் பின்னால் கட்டிக்கொண்டு அடர்ந்த காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். அவர் கொடுத்த தகவலின்படி காட்டுப் பகுதிக்குச் சென்ற போலீசார், சிறுமியின் எலும்புக்கூட்டு எச்சங்களை மீட்டு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். கள்ளக்காதலுக்காக மகளையே காவு வாங்கிய பெற்ற தாயின் கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.