கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம்அடுப்புட்டி பகுதியைச் சேர்ந்தவர் பினீஷ் (வயது 40). இவர் தனது வீட்டில் கஞ்சாவைப் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அவரது வீட்டிற்கு வந்து அதிரடியாகச் சோதனை நடத்த வந்தனர். முன்னதாகவே போலீசார் வருவதை மோப்பம் பிடித்த பினீஷ், வீட்டில் இருந்த கஞ்சா பொட்டலத்தை மறைக்க ஒரு விசித்திரமான பிளானைப் போட்டார்.

சமையலறையில் அடுப்பில் சாதம் வெந்து கொண்டிருந்த பிரஷர் குக்கரைத் திறந்து, அதற்குள் கஞ்சா இருந்த பிளாஸ்டிக் கவரைத் திணித்து மூடிவிட்டு, ஒன்றும் தெரியாதது போல் அமர்ந்துகொண்டார். தொடர்ந்து உள்ளே நுழைந்த போலீசார் வீடு முழுவதும் சல்லடை போட்டுச் சோதனை நடத்தியும், கஞ்சா எங்குமே கிடைக்காமல் திணறினர்.

ஆனால், அந்த நேரத்தில் அடுப்பில் இருந்த பிரஷர் குக்கர் தொடர்ந்து விசில் சத்தம் எழுப்பியதுடன், சாத வாசனையோடு சேர்ந்து கஞ்சா வாசனையும் வீடு முழுவதும் கமகமவெனப் பரவத் தொடங்கியது. இதனால் பயங்கர சந்தேகமடைந்த போலீசார், உடனடியாக அடுப்பில் இருந்த பிரஷர் குக்கரை இறக்கி, சுடச்சுடத் திறந்து பார்த்தனர்.

அப்போது குக்கருக்குள் வெந்து கொண்டிருந்த சாதத்திற்கு நடுவே, கஞ்சா பாக்கெட் அப்படியே “தம்” போடப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு போலீசாரே வாயடைத்துப் போயினர். இதையடுத்து, குக்கரில் வெந்த 401 கிராம் கஞ்சாவை அதிரடியாகப் பறிமுதல் செய்த போலீசார், “குக்கர் பிரியாணி கேட்டா கஞ்சா பிரியாணி தர்றியா?” என பினீஷை கையைப் பிடித்து இழுத்துச் சென்று கைது செய்தனர். இந்த விசித்திரக் கடத்தல் சம்பவம் கேரளாவில் பெரும் சிரிப்பலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.