அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம் இந்த மோதலின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. சாதாரண நிலையில் ஒரு கிலோ இயற்கை யுரேனியத்தின் விலை சுமார் 7,000 ரூபாய் வரை மட்டுமே இருந்தாலும், அது சுத்திகரிக்கப்படும்போது அதன் மதிப்பு பல கோடி டாலர்களாக உயர்கிறது.

சர்வதேச அணுசக்தி முகமையின் தகவல்படி, ஈரானிடம் உள்ள இந்த 400 கிலோ சுத்திகரிக்கப்பட்ட யுரேனியத்தைக் கொண்டு சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்க முடியும். இதுவே அமெரிக்காவின் மிகப்பெரிய கவலையாக உள்ளது.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்கவே அமெரிக்கா இந்தப் போரைத் தொடங்கியுள்ளது. போர் நிறுத்தத்திற்காக அமெரிக்கா 15 அம்சத் திட்டத்தை முன்வைத்த போதும், ஈரான் அதனை நிராகரித்து 5 அம்சங்கள் கொண்ட தனது சொந்தத் திட்டத்தை அளித்துள்ளது.

ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், மறுபுறம் அமெரிக்கா கூடுதலாக 3,500 வீரர்களை வளைகுடா பகுதிக்கு அனுப்பியுள்ளது. ஈரானின் இந்த யுரேனியக் கையிருப்பை முழுமையாக அழிக்க வேண்டும் என்பதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் உறுதியாக இருப்பதால், இந்தப் போர் மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.