சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் அவரது புதிய அரசுக்கு எதிராக மிகக் கடுமையான விவாதங்களை முன்வைத்துள்ளார்.
“தேர்தலில் நாங்கள் தோற்றுத்தான் போனோம்; ஆனால் இறந்துவிடவில்லை” என்று ஆவேசமாகப் பேசிய அவர், எத்தனையோ இழப்புகளைப் பார்த்த தங்களுக்கு எத்தனை விஜய் வந்தாலும் கவலையில்லை என்றார்.
மேலும், த.வெ.க. அரசுக்கு 65 சதவீத மக்கள் வாக்களிக்கவில்லை என்றும், மாயாஜாலம் போல த.வெ.க.வுக்கு ஆட்சி, அதிகாரம் கிடைத்துள்ளதால் முதல்வர் விஜய் ஆணவத்தோடு ஆடு புலி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார் என்றும் சாடினார்.
ஒரு லெட்டர் பேடு கட்சி கூட நம்பிச் செல்லாத த.வெ.க., தற்போது கைக்கூலிகளை வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வினரை இழுக்கும் ஆள்பிடிக்கும் வேலையைச் செய்வதாகக் குற்றம்சாட்டிய உதயகுமார், இந்த வேலையைத் தொடர்ந்தால் விஜய் கடும் விளைவுகளைச் சந்திப்பார் என எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கரூரில் 41 பேர் உயிரிழந்தபோது ஓடி ஒளிந்துகொண்ட முதலமைச்சர் விஜய்க்குத் தியாகமோ, போராட்டமோ, வரலாறோ தெரியாது என்றும், மேகதாது அணை விவகாரத்தில் த.வெ.க. அரசின் நகர்வு மர்மமாக உள்ளதாகவும், வாழ்க்கை என்பது ஒரு வட்டம், விரைவில் இயற்கை நீதி வெல்லும் என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
