தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகர் மோகன் சர்மா, தற்போது வயது முதிர்வால் ஏற்பட்ட சூழ்நிலைகளால் முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். பல மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான இவர், ஒரு காலத்தில் சென்னையின் போயஸ் கார்டன் பகுதியில் சொந்த வீட்டில் வசித்து வந்தவர்.
நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு என சினிமாவின் பல துறைகளிலும் பயணித்த மோகன் சர்மா, 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் நடித்த ‘சச்சின்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி கவனம் பெற்றார். மேலும் அவர் இயக்கிய திரைப்படங்களும் பாராட்டுகளை பெற்றுள்ளன.
ஆனால் காலத்தின் மாற்றத்தால் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டன. தற்போது கும்மிடிப்பூண்டியில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள அவர், தன்னை கவனித்துக்கொள்ள நெருங்கிய உறவினர்கள் அல்லது உதவியாளர்கள் இல்லாததால் சிரமங்களை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார். அன்றாட தேவைகளுக்கும், மருத்துவ செலவுகளுக்கும் போராடும் நிலை ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
மோகன் சர்மாவின் நிலை குறித்து அறிந்த நடிகர் ரஜினிகாந்த், அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். அவரது தேவைகளை கருத்தில் கொண்டு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் பல ஆண்டுகள் பயணித்த கலைஞருக்கு கிடைத்த இந்த ஆதரவு, ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
