பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் சஹ்ரி பகுதியில் உள்ள முன்னாள் மேயரும், பலுசிஸ்தான் தேசியக் கட்சியின் (BNP) மூத்த தலைவருமான சர்தார் நசீர் அகமதுவின் வீட்டிற்குள் புகுந்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் திடீரென அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம், திடீரென துப்பாக்கிச் சூடாக மாறியது. இந்த மனிதாபிமானமற்ற கொடூரத் தாக்குதலில், சர்தார் நசீர் அகமதுவின் மகன்களான கலீல் மிசியானி மற்றும் உமைர் சுமாலானி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். அரசியல் தலைவர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து ராணுவம் நடத்திய இந்தத் துணிச்சலான துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒட்டுமொத்த பலுசிஸ்தான் மாகாணத்திலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தைக் கண்டித்து சர்தார் அக்தர் ஜான் மெங்கல் தலைமையிலான பிஎன்பி (BNP) கட்சி, பாகிஸ்தான் அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மாகாணம் தழுவிய தொடர் போராட்டங்களையும் அறிவித்துள்ளது. தங்களது ஜனநாயகக் குரலை ஒடுக்குவதற்காகவே திட்டமிட்டு ராணுவம் இந்த அராஜகத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அக்கட்சியினர், உயிரிழந்தவர்களின் படுகொலை குறித்து ஒரு சுதந்திரமான மற்றும் வெளிப்படையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்குக் காரணமான ராணுவ அதிகாரிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவத்தால் பலுசிஸ்தான் பகுதியில் தற்போதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.