ஈரானிய ராணுவத்திற்கு சிப் தயாரிக்கும் நவீன உபகரணங்களையும் தொழில்நுட்ப பயிற்சியையும் சீனாவைச் சேர்ந்த எஸ்.எம்.ஐ.சி  நிறுவனம் வழங்கி வருவதாக அமெரிக்கா அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த ஒரு வருடமாக நீடிக்கும் இந்த ரகசிய ஒத்துழைப்பு, ஈரானின் ராணுவ பலத்தையும் ஆயுதக் கட்டமைப்பையும் கணிசமாக உயர்த்தக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அமெரிக்காவின் கறுப்புப் பட்டியலில் உள்ள இந்த சீன நிறுவனம், தடையை மீறி அமெரிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதா என்பது குறித்தும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இந்த விவகாரம் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான ராஜதந்திர மோதலை மேலும் சூடாக்கியுள்ளது. சீனா தனது தரப்பில் இது ஒரு சாதாரண வர்த்தகம் என்று கூறினாலும், ஈரான் சீனாவிடமிருந்து ஏவுகணைகளை வாங்கத் திட்டமிட்டுள்ள செய்திகள் பதற்றத்தை அதிகரித்துள்ளன. மத்திய கிழக்கு போரின் பின்னணியில், சீனாவின் இந்த நடவடிக்கை ஈரானுக்கு மறைமுகமாக உதவும் என்று அஞ்சப்படுகிறது.

உலக நாடுகளை அமைதிக்கு அழைக்கும் அதே வேளையில், சீனா இதுபோன்ற ராணுவ உதவிகளைச் செய்வது சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.