மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க, அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் அதிரடியாகக் களமிறங்கியுள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த துருக்கி, பாகிஸ்தான் மற்றும் எகிப்து போன்ற நாடுகள் முயன்று வரும் வேளையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் நிபுணத்துவம் பெற்ற கத்தாரை அமெரிக்கா தற்போது நாடியுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்த மத்தியஸ்தத்திலிருந்து கத்தார் விலகியிருந்த நிலையில், ஜே.டி. வேன்ஸ் கத்தார் பிரதமரை நேரில் சந்தித்துப் பேசியது சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆரம்பத்திலிருந்தே ஈரான் போரை எதிர்த்து வரும் வேன்ஸ், இஸ்ரேலுக்காக அமெரிக்கா இந்தப் போரில் ஈடுபடுவதை விரும்பவில்லை. தலிபான் மற்றும் ஹமாஸ் போன்ற கடினமான அமைப்புகளுடன் ஏற்கனவே அமைதி ஒப்பந்தங்களைச் செய்து கொடுத்த அனுபவம் கத்தாருக்கு உள்ளதால், வேன்ஸ் அந்த நாட்டின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்.
ஈரானுடன் ஒரு சுமுகமான உடன்பாட்டை ஏற்படுத்தினால், அது வேன்ஸின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியாக அமையும் என்பதோடு, மத்திய கிழக்கில் அமைதி திரும்பவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
