இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலில் ‘ஸ்ட்ரெஸ்’ (மன அழுத்தம்) என்பது அனைவரது வாழ்விலும் அன்றாடப் பகுதியாக மாறிவிட்டது. ஆனால், பலரும் தங்களுக்கு இருக்கும் ‘எங்ஸைட்டி’  எனப்படும் பதற்றக் கோளாறைச் சாதாரண மன அழுத்தம் என்று தவறாகப் புரிந்து கொண்டு அலட்சியப்படுத்தி விடுகின்றனர். இப்படி எங்ஸைட்டியைக் கண்டுகொள்ளாமல் விடுவது பிற்காலத்தில் மிகப்பெரிய மனநலப் பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பொதுவாக, மன அழுத்தம் என்பது நமக்கு வெளியில் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையாலோ அல்லது பிரச்சனையாலோ உருவாகிறது. உதாரணமாக, அலுவலக வேலைப் பளு, நிதிப் பிரச்சனைகள் அல்லது தேர்வுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் தாக்கம் தான் மன அழுத்தம். இந்தச் சூழல்கள் அல்லது பிரச்சனைகள் முடிவுக்கு வரும்போது, அதனுடன் சேர்ந்து நமக்கு ஏற்படும் மன அழுத்தமும் இயல்பாகவே மறைந்துவிடும்.

ஆனால், எங்ஸைட்டி  என்பது முற்றிலும் வேறுபட்டது. எவ்விதக் குறிப்பிட்ட காரணமோ அல்லது வெளிப்படையான அச்சுறுத்தலோ இல்லாதபோதும், மனதில் தொடர்ச்சியாக பயமும் கவலையும் இருந்து கொண்டே இருப்பது தான் எங்ஸைட்டி. ஒரு பிரச்சனை முடிந்த பிறகும் கூட, “அடுத்து என்ன நடக்குமோ” என்ற தேவையில்லாத பயமும் பதற்றமும் மனதை விட்டு விலகாமல் இருப்பது இதன் முக்கிய அறிகுறியாகும்.

எனவே, உங்களுக்கு ஏற்படும் மன மாற்றங்களைச் சரியாகக் கவனித்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். சாதாரண மன அழுத்தமாக இருந்தால் தியானம், ஓய்வு மற்றும் எளிய முறைகள் மூலம் அதைச் சரிசெய்துவிட முடியும். ஆனால், தொடர்ச்சியாகத் தேவையில்லாத பயமும் பதற்றமும் உங்களை ஆட்கொண்டால், அதை அலட்சியப்படுத்தாமல் ஆரம்பத்திலேயே மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றுத் தீர்வு காண்பதே ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.