மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை இழந்த மம்தா பானர்ஜியின் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தற்போது வரலாற்றிலேயே இல்லாத வகையில் மிக மோசமான அரசியல் பிளவைச் சந்தித்துள்ளது. அக்கட்சியின் ஒட்டுமொத்த பலத்தையே உலுக்கும் விதமாக, ஏற்கனவே 60 சட்டமன்ற உறுப்பினர்கள் மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜிக்கு எதிராகத் தனி அணியாகத் திரண்டு, தங்களை ‘உண்மையான திரிணாமுல் காங்கிரஸ்’ என அறிவித்துள்ளனர்.

இந்த அதிருப்தி கோஷ்டியினர் மாற்றுத் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், மம்தாவின் அரசியல் கோட்டை மாநில அளவில் சரிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது.மாநில அளவில் ஏற்பட்ட இந்த பிளவு தற்போது நாட்டின் தலைநகரான டெல்லியிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் தனிக் குழுவாகப் பிரிந்து, நாடாளுமன்றத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை பகிரங்கமாக ஆதரிக்கப் போவதாக அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.

இந்த அதிருப்தி எம்.பி.க்கள் டெல்லியில் மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளது மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அடுத்தடுத்த அரசியல் நிலநடுக்கங்களால் மம்தா பானர்ஜியின் தேசிய அளவிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக் கனவும், கட்சியின் எதிர்காலமும் கடுமையான கேள்விக்குறியாக மாறியுள்ளது.