மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவி வரும் போர் பதற்றம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சவுதி அரேபியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தை குறிவைத்து, ஈரான் நாடு சரமாரியாக ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

இந்த பயங்கரமான தாக்குதலில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் நிரப்பும் விமானங்கள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. ஈரானின் இந்த நேரடி ஆக்ஷன், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

​இந்த திடீர் தாக்குதலால் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 10 வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் எட்டு பேருக்கு பலத்த காயங்களும், இரண்டு வீரர்களுக்கு மிக மோசமான பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இதுவரை நடந்துள்ள மோதல்களில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்துள்ள நிலையில், 13 வீரர்கள் உயிரிழந்திருப்பது அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த ஆக்ரோஷமான பதிலடிக்கு அமெரிக்கா என்ன செய்யப்போகிறது என்ற அச்சம் இப்போது உலக நாடுகள் மத்தியில் பரவி வருகிறது.