ஆந்திர மாநிலம் குண்டூரில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு, அவர் விழிப்புடன் இருக்கும்போதே மூளைக் கட்டி அகற்றும் அரிய வகை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக இத்தகைய கடினமான அறுவை சிகிச்சைகளின் போது நோயாளிகள் மயக்க நிலையில் வைக்கப்படுவார்கள். ஆனால், இந்த அறுவை சிகிச்சையின் போது அந்தப் பெண் பயமோ, மயக்கமோ இன்றி, தனக்கு மிகவும் பிடித்த தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ‘ஓஜி’ திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டே இருந்துள்ளார்.

மருத்துவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டும், அறுவை சிகிச்சை செய்துகொண்டும் இருந்த சூழலில், அந்தப் பெண் எந்தவித பதற்றமும் இன்றி திரைப்பாதையை ரசித்துக் கொண்டிருந்த நிகழ்வு மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மூளையின் முக்கியப் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, நோயாளி விழிப்புடன் இருக்கும்போதே செய்யப்படும் ‘அவேக் கிரானியோடமி’ என்ற நவீன மருத்துவ முறையில் இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டது.

அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் நரம்பியல் செயல்பாடுகளைக் கண்காணிப்பது மிகவும் அவசியம் என்பதால், மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து பேச வைக்க அல்லது கவனத்தைத் திருப்ப முயன்றனர்.

“>

 

அப்போது, பவன் கல்யாணின் தீவிர ரசிகையான அந்தப் பெண், அவரது படத்தை லேப்டாப்பில் பார்க்க விரும்புவதாகக் கூறியதை அடுத்து மருத்துவர்கள் அதற்கு அனுமதி அளித்தனர். எவ்வித தடையுமின்றி வெற்றிகரமாக கட்டி அகற்றப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பெண் முழு குணமடைந்து நலமாக இருப்பதாக குண்டூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.