ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள அணுசக்தி முக்கியத்துவம் வாய்ந்த தளங்களுக்கு அருகில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேசஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் போக்கு தற்போது ஒரு ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் ஈரானில் உள்ள நடன்ஸ் செறிவூட்டல் வளாகம் மற்றும் இஸ்ரேலிய நகரமான டிமோனாவில் உள்ள அணுசக்தி நிலையம் ஆகியவற்றை இலக்கு வைத்துத் தாக்குதல்கள் நடத்தப்படுவது கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

இத்தகைய சூழலில் போர் மேலும் தீவிரமடையக்கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ள அவர் அணுசக்தி தளங்களைக் குறிவைக்கும் செயல்கள் பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச அணுசக்தி முகமையானது இந்தச் சம்பவங்கள் குறித்துத் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக டாக்டர் டெட்ரோஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி அணுசக்தி தளங்களுக்கு வெளியே அசாதாரணமான கதிர்வீச்சு மாற்றங்கள் அல்லது அதிகரித்த கதிர்வீச்சு அளவுகள் எதுவும் பதிவாகவில்லை என்பது சற்றே நிம்மதியளிக்கும் விஷயமாகக் கருதப்படுகிறது.

இருப்பினும் அணுசக்தி நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பதற்றம் நீடிப்பதால் ஏற்படக்கூடிய பரந்த அளவிலான அபாயங்கள் குறித்து அவர் உலக நாடுகளை எச்சரித்துள்ளார். வளைகுடாப் பகுதியில் நிலவும் போர்ச் சூழல் மனித குலத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் சர்வதேச சமூகங்கள் தலையிட வேண்டும் என்றும் அணுசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.