ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே அமெரிக்காவின் தலையீட்டுடன் நடைபெற்று வரும் போர் இன்று இருபத்தி நான்காவது நாளை எட்டியுள்ளது. உலகின் முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகக் கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் உலக அளவில் எரிபொருள் விநியோகம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஈரான் அரசு ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருப்பதாகவும் ஆனால் தங்கள் எதிரிகள் மற்றும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் நட்பு நாடுகளுக்கு மட்டும் அதன் வழியாகச் செல்ல அனுமதி இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஈரான் உடனான போரைத் தொடர கூடுதலாக 200 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் பதினெட்டு லட்சம் கோடி ரூபாய் நிதி தேவை என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் கோரிக்கை விடுத்துள்ளது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்தச் சூழலில் ஈரானுக்கு எதிரான போரை எதிர்கொள்ளத் தேவையான நிதி அமெரிக்காவிடம் ஏராளமாக உள்ளதாக அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பெண்டகன் கோரியுள்ள 18 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் நிதி குறித்துப் பேசிய அவர் இதற்காக அமெரிக்க மக்கள் மீது புதிய வரிகள் எதையும் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். போர்ச் செலவுகளை அமெரிக்கப் பொருளாதாரம் எளிதாகச் சமாளிக்கும் திறன் கொண்டது என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

வளைகுடாப் பகுதியில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்காவின் இந்த நிதி நிலை குறித்த அறிவிப்பு சர்வதேச அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.