ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சிக்கித் தவித்த இரண்டு இந்திய எரிவாயு கப்பல்களுக்கு ஈரான் நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படை அனுமதி வழங்கியுள்ளது இந்தியாவிற்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. ‘சிவாலிக் மற்றும் ‘நந்தா தேவி’ ஆகிய இந்த இரண்டு கப்பல்களும் சுமார் 92,700 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு பாதுகாப்பாக ஜலசந்தியைக் கடந்துள்ளன.
மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இடையேயான உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஈரானின் ‘நட்பு நாடு’ என்ற அடிப்படையில் இந்தியக் கப்பல்களுக்கு இந்த விதிவிலக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல்கள் குஜராத்தில் உள்ள முந்திரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களை வந்தடைவதன் மூலம், இந்தியாவில் நிலவி வரும் எல்பிஜி தட்டுப்பாடு மற்றும் விநியோகத் தடைகள் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மத்திய அமைச்சகத்தின் தகவல்படி, தற்சமயம் நாட்டில் போதிய எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் பதற்றமடைந்து சிலிண்டர்களை முன்பதிவு செய்யத் தேவையில்லை என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும், இன்னும் 22 இந்தியக் கப்பல்கள் அந்தப் பகுதியில் காத்திருப்பதால், அவற்றையும் பாதுகாப்பாக மீட்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரமான ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
