அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு ஈரான் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. “அடிப்படையற்ற அச்சுறுத்தல்கள்” என்று ட்ரம்ப்பின் கருத்தை விமர்சித்துள்ள ஈரான், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதற்கு மிகக் கடுமையான விளைவுகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

மேலும் ஈரான் தனது பாதுகாப்புத் திறனை முன்னிறுத்தி, இத்தகைய மிரட்டல்கள் மத்திய கிழக்கில் அமைதியைச் சீர்குலைக்கவே உதவும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. மறுபுறம், ட்ரம்ப்பின் கடுமையான நிலைப்பாடு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இஸ்ரேலுக்கான தனது முழுமையான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் பிராந்திய ஆதிக்கத்தைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்,

இந்நிலையில் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான வார்த்தைப் போர், ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளதோடு, சர்வதேச நாடுகளிடையே இது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.