எஸ்.பி.ஐ மற்றும் ஹெச்.டி.எப்.சி உள்ளிட்ட முன்னணி வங்கிகள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஏடிஎம்  பரிவர்த்தனை விதிகளில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. இனி டெபிட் கார்டு மட்டுமின்றி, யுபிஐ கியூஆர் கோட் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுப்பதும் இலவச வரம்பிற்குள் கொண்டு வரப்படும்.

வழக்கம்போல உங்கள் வங்கி ஏடிஎம்மில் 5 முறையும், மற்ற வங்கிகளில் இடத்தைப் பொறுத்து 3 முதல் 5 முறையும் மட்டுமே இலவசமாகப் பணம் எடுக்க முடியும். இந்த வரம்பைத் தாண்டினால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சுமார் 23 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் என ஹெச்.டி.எப்.சி வங்கி அறிவித்துள்ளது.

பணம் எடுப்பது மட்டுமின்றி, இலவச வரம்பு முடிந்த பிறகு ஏடிஎம்மில் பேலன்ஸ் பார்ப்பது அல்லது மினி ஸ்டேட்மென்ட் எடுப்பதற்குக் கூட 8.50 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். கணக்கில் போதிய பணம் இல்லாமல் பரிவர்த்தனை தோல்வியடைந்தால், அதற்கும் 20 முதல் 25 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நகர்ப்புறங்களை விட, ஏடிஎம்களை அதிகம் நம்பியிருக்கும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இந்த வங்கிகளின் புதிய கட்டண முறைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.