தெலுங்கானா மாநிலம் நார்சங்கி பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்களின் 4 வயது மகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுள்ளனர். மதியம் அவர்கள் வீடு திரும்பியபோது சிறுமி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வாலிபர் ஒருவர் சிறுமியை அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்ததைக் கண்டு அதே குடியிருப்பில் வசிக்கும் இருபத்தைந்து வயதுடைய பிஸ்வாஸ் என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

காவல்துறையினரின் தீவிர விசாரணையில் பிஸ்வாஸ் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். மிட்டாய் தருவதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு இந்த விபரம் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் பாறாங்கல்லால் தாக்கிச் சிறுமியைப் படுகொலை செய்ததாக அவர் தெரிவித்தார்.

இதையெடுத்துக் காவல்துறையினர் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். நான்கு வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.