சமூக வலைதளங்களில் தற்போது உலகத் தலைவர்களின் விசித்திரமான மற்றும் வேடிக்கையான ‘ஏஐ’ (Artificial Intelligence) வீடியோக்கள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. உண்மையான வீடியோ எது, போலியானது எது என்று கண்டறிய முடியாமல் மக்கள் குழப்பமடைந்துள்ள நிலையில், இந்த ‘டீப்ஃபேக்’ (Deepfake) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தான் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்த ஒரு காபி ஷாப்பில் அமர்ந்து காபி குடிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்தார். அதனை அப்படியே தழுவி, ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அதே காபி ஷாப்பில் அமர்ந்து காபி குடிப்பது போன்ற வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், “இதில் இருப்பவர் உண்மையானவரா அல்லது போலியா என்று தெரியவில்லை” என கருத்து தெரிவித்து வருகின்றனர். மற்றொருவர், “அந்தக் கோப்பையில் இருக்கும் காபி அசையவே இல்லை, குரல் அப்படியே நெதன்யாகுவைப் போலவே இருக்கிறது” என அதன் நுணுக்கமான குறைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். “ஒருவேளை இருவரும் அங்கே நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால் எப்படி இருக்கும்?” என நெட்டிசன்கள் வேடிக்கையாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மற்றொரு வைரல் வீடியோவில், லிபியாவின் முன்னாள் அதிபர் முயம்மர் கடாபி ஒரு ‘ராப்’ (Rapper) பாடகரைப் போலத் தோன்றி பாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முற்றிலும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட இந்த வீடியோ, அதன் தத்ரூபமான தன்மையால் பலரையும் கவர்ந்துள்ளது. பலரும் இதனை ஒரு ‘மீம்’ (Meme) போல சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் அரசியல் வதந்திகளுக்காகத் தொடங்கப்பட்ட இந்த வீடியோ கலாச்சாரம், தற்போது உலகத் தலைவர்களை நகைச்சுவையான சூழல்களில் சித்தரிக்கும் ஒரு முழுநேர இணையப் போக்காக மாறியுள்ளது. இருப்பினும், இத்தகைய தொழில்நுட்பம் தவறான தகவல்களைப் பரப்பவும், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.