ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் நடத்தி வரும் தொடர் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, அது அமீரகத்தின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும் ஒரு திட்டமிட்ட ‘யுத்த தந்திரம்’ என்பது தற்போதைய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய இந்தப் போரில், ஈரான் இதுவரை சுமார் 1,800 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அமீரகத்தை நோக்கி ஏவியுள்ளது. அமீரகத்தின் நவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் (Air Defense) இவற்றில் பெரும்பாலானவற்றைத் தடுத்து அழித்தாலும், ஈரானின் உண்மையான நோக்கம் தாக்குதல் நடத்துவது மட்டுமல்ல; மாறாக எதிரியைப் பொருளாதார ரீதியாகப் பலவீனப்படுத்துவதே ஆகும்.

ஈரானின் இந்தத் தாக்குதல் மூன்று முக்கியக் கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஈரான் ஏவியது. இது அமீரகத்தின் ரடார் அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பின் வலிமையையும், அது செயல்படும் வேகத்தையும் சோதிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அமைந்தது.

மார்ச் 2 முதல் மார்ச் 8 வரை, ஏவுகணைகளின் எண்ணிக்கையைக் குறைத்து, மலிவு விலை ட்ரோன்களை ஈரான் அதிக அளவில் பயன்படுத்தியது. ஒரு ட்ரோனின் விலை சில ஆயிரம் டாலர்கள் மட்டுமே. ஆனால், அதனைச் சுட்டு வீழ்த்த அமீரகம் பயன்படுத்தும் ஏவுகணையின்  விலை பல லட்சம் டாலர்கள் ஆகும். இதனால், ஈரானை விட அமீரகத்திற்குப் பல மடங்கு கூடுதல் செலவு ஏற்பட்டு, அதன் ‘கஜானா’ காலியாகும் சூழல் உருவாகியுள்ளது.

மார்ச் 9-க்குப் பிறகு தாக்குதல்களின் எண்ணிக்கை திடீரெனக் குறைந்து, தினமும் 10 முதல் 20 ட்ரோன்கள் மட்டுமே ஏவப்படுகின்றன. இது எதிரிப் படைகளை எப்போதும் தயார் நிலையில் இருக்க வைத்து அவர்களைச் சோர்வடையச் செய்யும் (Fatigue) தந்திரமாகும்.

ஈரானின் இலக்கு ராணுவத் தளங்கள் மட்டுமல்லாமல், துபாயின் வானளாவிய கட்டிடங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளையும் குறிவைப்பதாக உள்ளது. இதனால் உலகின் மிக முக்கியமான துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை மட்டுமே நம்பியிருக்கும் அமீரகப் பொருளாதாரத்திற்கு இது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

ஈரானின் இந்த நடவடிக்கை நவீனப் போர்முறையின் புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது. அதிக பொருட்செலவில் பெரிய சேதத்தை ஏற்படுத்துவதை விட, குறைந்த செலவில் ட்ரோன்களைப் பயன்படுத்தி எதிரியைத் தொடர்ந்து செலவு செய்ய வைத்து, அவர்களைப் பொருளாதார ரீதியாக முடக்குவதே ஈரானின் மாஸ்டர் பிளான் ஆகும். மேலும் அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இருந்தபோதிலும், மலிவு விலை ட்ரோன் தாக்குதல்கள் வல்லரசு நாடுகளுக்கே சவாலாக மாறியுள்ளதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது.