வடகொரியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான கொரிய தொழிலாளர் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 99.97 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. (KCNA) தெரிவித்துள்ளது. 15-வது உச்ச மக்கள் பேரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான இந்தத் தேர்தல் கடந்த மார்ச் 15-ம் தேதி நடைபெற்றது. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி,

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 99.99% பேர் வாக்களித்துள்ளனர். வெளிநாட்டில் இருந்தவர்கள் மற்றும் கடலில் பணிபுரிந்த 0.0037% பேரால் மட்டுமே வாக்களிக்க முடியவில்லை. வாக்களித்தவர்களில் 99.93% பேர் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், 0.07% பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

தொழிலாளர்கள், விவசாயிகள், அறிஞர்கள் என மொத்தம் 687 பிரதிநிதிகள் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங், கல்லிம்கில் (தொகுதி எண் 5) தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

வழக்கமாக வடகொரியத் தேர்தல்களில் 100 சதவீத ஆதரவு வாக்குகளே பதிவாகும். ஆனால், 1957-ம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக இந்தத் தேர்தலில் 0.07% எதிர்ப்பு வாக்குகள் பதிவாகியுள்ளதை அந்நாட்டு அரசு ஊடகங்கள் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே போட்டியிட்டதால், வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இதனை ஒரு “காட்சித் தேர்தல்” என்று விமர்சித்துள்ளனர்.

இந்த 0.07% எதிர்ப்பு வாக்குகள் குறித்த செய்தி வெளியானவுடன், சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களது நகைச்சுவையான பாணியில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்: “அந்த 0.07% பேரின் ஆத்மா சாந்தியடைய ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவோம்” என ஒருவர் கிண்டலடித்துள்ளார். “அந்த 0.07% பேரின் பெயர்களைக் கூறுங்கள்… அவர்களைக் கவனிக்க வேண்டும்” என கிம் ஜாங் உன் கேட்பது போன்ற மீம்கள் வைரலாகி வருகின்றன.

“இந்தக் கோடைக் காலத்தில் வடகொரியாவின் மக்கள் தொகை 0.07% குறைய வாய்ப்புள்ளது” என மற்றொருவர் பதிவிட்டுள்ளார். மேலும் “நாட்டின் மிகவும் தேடப்படும் நபர்களாக இப்போது அந்த 0.07% பேர் மாறியிருப்பார்கள்” என இணையவாசிகள் தொடர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர்.