ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2020-ஆம் ஆண்டு இந்தியாவுடனான முக்கியமான ரயில்வே ஒப்பந்தத்தை ஈரான் ரத்து செய்தது அந்நாட்டிற்கு தற்போது பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.
2016-ல் கையெழுத்தான சாபஹார் – ஜாஹெதான் இடையிலான 628 மைல் நீள ரயில் பாதை திட்டத்தை, நிதி மற்றும் பணிகளில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி ஈரான் தன்னிச்சையாக ரத்து செய்தது. ஒருவேளை இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், தற்போதைய போர்க்காலத்தில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களை எல்லைப் பகுதிகளுக்கு விரைவாகக் கொண்டு செல்ல இந்த ரயில் பாதை ஈரானுக்கு ஒரு ‘உயிர்நாடியாக’ அமைந்திருக்கும் எனப் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

பாகிஸ்தானைச் சார்ந்திருக்காமல் இந்தியாவை ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவுடன் இணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த ₹12,000 கோடி மதிப்பிலான திட்டம், சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தின் (INSTC) ஒரு முக்கிய அங்கமாகும்.
இன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் வான்வழித் தாக்குதல்களால் ஈரான் நிலைகுலைந்து வரும் சூழலில், இந்த ரயில்வே கட்டமைப்பு இருந்திருந்தால் வான்வழித் தாக்குதல்களின் பாதிப்பைக் குறைத்து விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்தியிருக்க முடியும். ஈரானின் அந்த ஒரு தவறான முடிவு, இன்று டொனால்ட் டிரம்பின் போர் வியூகங்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டதாகவும், இந்தியாவுடனான உறவில் ஏற்பட்ட அந்த விரிசல் தற்போது ஈரானுக்குப் பெரும் விலையைக் கொடுத்து வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
