நெல்லை டவுன் பகுதியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தாயின் இரண்டாவது கணவரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதாவது திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், அந்த இளம்பெண்ணிற்கு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இது காதலாக மாறவே, இருவரும் திருமணம் செய்து கொண்டு நெல்லை டவுன் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.

கடந்த சில நாட்களாக, அந்தப் பெண்ணின் முதல் கணவருக்குப் பிறந்த 6 வயது சிறுமிக்கு, அவரது இரண்டாவது கணவர் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த சிறுமி இது குறித்துத் தனது தாயிடம் தெரிவித்துள்ளார். தனது இரண்டாவது கணவரின் இக்கோர முகத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக நெல்லை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்திச் சம்பவத்தை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து, கடலூரைச் சேர்ந்த அந்தத் தொழிலாளி மீது போக்சோ (POCSO) சட்டம் உள்ளிட்ட மூன்று கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது