விழுப்புரம் அருகே கணவரிடம் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதாவது விழுப்புரம் அருகே உள்ள சோழாம்பூண்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் தீபவள்ளி (19). இவருக்கும், மகேஸ்வரன் (27) என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜனவரி 28-ம் தேதி இவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு மகேஸ்வரன் மதுபோதையில் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த தீபவள்ளி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், தீபவள்ளி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து தீபவள்ளியின் தந்தை ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு பரிந்துரைத்தனர். வெள்ளிக்கிழமை பிரேதப் பரிசோதனை முடிவடைந்த நிலையில், தீபவள்ளியின் மரணத்திற்கு காரணமான கணவர் மகேஸ்வரனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்ததையடுத்து, உறவினர்கள் மறியலைக் கைவிட்டு தீபவள்ளியின் உடலைப் பெற்றுச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.