கரூர் மாவட்ட பாமக தலைவர் தமிழ்மணியின் மகன் கவின், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம்  இரவு தனது ஊரைச் சேர்ந்த நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதத்தால், கவின் இன்று அதிகாலை ஒரு விவசாய நிலத்தில் காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

இந்தப் படுகொலைக்குக் காரணமான கண்ணன், மனோஜ் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவினாலும், போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பது இளைய சமுதாயத்தைச் சீரழிப்பதாக ராமதாஸ் தனது அறிக்கையில் வேதனை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த கவின் குடும்பத்திற்கு அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், இளைஞர்கள் போதைப் பழக்கம் உள்ள நண்பர்களிடமிருந்து விலகி தங்கள் உயிரையும் எதிர்காலத்தையும் காத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழகம் முழுவதும் பெருகி வரும் போதைப் புழக்கத்தைத் தடுக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.