தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு அரசியல் தலைவர்களும் இச்சம்பவத்திற்குத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் சில தகவல்களுக்குக் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என்றும் சம்பவ இடத்திலிருந்து மாணவியின் உடல் முழுமையாகவே மீட்கப்பட்டது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது உடற்கூராய்வு அறிக்கை மற்றும் தடய அறிவியல் விசாரணை முடிவுகள் வந்த பிறகே உறுதி செய்யப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
எனவே பொதுமக்கள் உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் உயிரிழந்த மாணவியின் புகைப்படம் அல்லது பெயரைச் சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
