மியான்மர் தலைநகர் யாங்கோனில் இருந்து டெல்லி வந்த விமானத்தில், இரண்டு வெளிநாட்டுப் பயணிகள் எதையும் சாப்பிடாமலும் தண்ணீர் கூட குடிக்காமலும் அமர்ந்திருந்தது ஒரு விமானப் பணிப்பெண்ணுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் அன்புடன் தண்ணீர் கொடுத்தபோதும் அந்தப் பயணிகள் அதைத் தவிர்த்தனர்.

பொதுவாக, உடலில் தங்கம் அல்லது போதைப்பொருட்களை மறைத்து வைத்து கடத்துபவர்கள், அவை வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பயணத்தின் போது எதையும் உட்கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்த அந்தப் பணிப்பெண், உடனடியாக இது குறித்து விமானிக்குத் தகவல் அளித்தார்.

விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும், சந்தேகத்திற்குரிய அந்த இருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். எக்ஸ்ரே சோதனையில், அவர்கள் இருவரும் தங்கள் மலக்குடலில் தலா நான்கு தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடமிருந்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 1329 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மியான்மரைச் சேர்ந்த அந்த இருவரையும் கைது செய்த அதிகாரிகள், இந்த கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.