கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஜாக்பாட் செய்தி வெளியாகியுள்ளது. ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுகளில் கிரிக்கெட் போட்டியும் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டு, அதற்கான முழு அட்டவணையும், அணிகள் மோதும் விவரங்களும்  தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஏசியன் கேம்ஸ் வரலாற்றில் கிரிக்கெட் சேர்க்கப்படுவது இது 4-வது முறையாகும். கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகள், இந்த முறையும் தங்களது மகுடத்தைத் தக்கவைக்க ‘டிஃபெண்டிங் சாம்பியனாக’ களம் இறங்குகின்றன.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அனல் பறக்கும் மோதல் இந்தத் தொடரில் நடக்குமா என்ற கேள்விக்கு, போட்டி அமைப்பாளர்கள் ஒரு சுவாரசியமான ட்விஸ்ட் வைத்துள்ளனர். தரவரிசையில் டாப் இடத்தில் இருக்கும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நான்கு அணிகளும் நேரடியாகக் காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இதனால் இந்தியாவும் பாகிஸ்தானும் வெவ்வேறு பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இரு அணிகளும் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் மட்டுமே நேருக்கு நேர் மோத முடியும் என்ற விறுவிறுப்பான சூழல் உருவாகியுள்ளது!

இந்தத் தொடரில் விளையாடப்படும் அனைத்துப் போட்டிகளும் சர்வதேச அந்தஸ்து பெற்ற டி20 வடிவில் நடைபெறவுள்ளன. மகளிர் அணிகளுக்கான போட்டிகள் செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 22, 2026 வரையிலும், ஆண்கள் அணிகளுக்கான போட்டிகள் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 1, 2026 வரையிலும் ஜப்பானில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்கள் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆப்கானிஸ்தான், ஜப்பான், நேபாளம், ஹாங்காங், மலேசியா மற்றும் ஓமன் ஆகிய 6 நாடுகள் மோதவுள்ளன.

நேரடியாகக் காலிறுதியில் களம் காணும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தனது முதல் போட்டியில் போட்டியை நடத்தும் ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி, அரையிறுதியில் பங்களாதேஷ் அல்லது சீனாவுடன் மோதும். மற்றொரு பிரிவில் இலங்கை – மலேசியா மோதும் போட்டியின் வெற்றியாளரும், பாகிஸ்தான் – தாய்லாந்து மோதும் போட்டியின் வெற்றியாளரும் அரையிறுதியில் மோதுவார்கள். ஆண்கள் பிரிவைப் போலவே மகளிர் பிரிவிலும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் இறுதிப் போட்டியில் மட்டுமே சாத்தியம் என்பதால், இந்தத் தொடர் ஆரம்பம் முதலே ரசிகர்களுக்கு பெரும் சுவாரசியத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.