மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாகப் போராடி வரும் மாணவர்களுக்குப் சில பிரபலங்கள் ஆதரவு தெரிவிப்பதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் போலியானவை என்று தற்போதைய கள ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் இணை உரிமையாளரும், பிரபல தொழிலதிபருமான அனன்யா பிர்லா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் மாணவர்களுக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளதாக வெளியான செய்திகள் அனைத்தும் வதந்திகளே என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் அனன்யா பிர்லாவின் பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தி, “நான் ஒவ்வொரு நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவருடனும் நிற்கிறேன்; மாணவர்களுக்குத் தகுந்த நீதியான, வெளிப்படையான தேர்வு முறையை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்ற செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. ஆனால், மிக உன்னிப்பாகக் கவனித்த போது, அது அனன்யா பிர்லாவின் அதிகாரப்பூர்வமான பக்கத்தில் இருந்து பகிரப்படவில்லை என்பதும், அவரது பெயரில் இயங்கி வரும் ஒரு சாதாரண ‘ஃபேன் பேஜ்’ கணக்கில் இருந்துதான் இந்த செய்தி பரப்பப்பட்டுள்ளது என்பதும் அம்பலமாகியுள்ளது. இதை அனன்யா பிர்லா அதிகாரப்பூர்வமாகப் பகிரவில்லை.
இதேபோன்று, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசியதாக ஒரு பதிவு எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. “மாணவர்களுக்குத் தகுதியான, வெளிப்படையான தேர்வு முறையும், தகுதியின் அடிப்படையில் அமையும் எதிர்காலமும் கிடைக்க வேண்டும். மாணவர்களின் கோரிக்கைகளை அரசு தீவிரமாகக் கேட்க வேண்டும். அதிகாரிகள் இதற்கு உடனடியாகப் பொறுப்பேற்று தீர்வு காண வேண்டும்” என்று விராட் கோலி கூறியதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் பரவியது. ஆனால், ஆய்வு செய்ததில் அது @Highonchurma என்ற பெயருடைய வேறொரு நபரால் கோலியின் பெயர் மற்றும் முகப்புப் படத்தை மட்டும் பயன்படுத்திப் பதிவிடப்பட்ட போலியான கணக்கு என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விராட் கோலியின் உண்மையான அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கின் பெயர் @imVkohli ஆகும். அவரது பக்கத்தில் நீட் தேர்வு தொடர்பாக எந்தவொரு கருத்தோ அல்லது பதிவோ வெளியிடப்படவில்லை. பிரபலங்களின் பெயரில் இருக்கும் ரசிகர் பக்கங்கள் மற்றும் போலி கணக்குகளைப் பார்த்து ஏமாந்து, நெட்டிசன்கள் பலரும் அதை உண்மை என்று நம்பிப் பகிர்ந்து வருகின்றனர். எனவே, பொதுமக்களும் வாசகர்களும் சமூக வலைதளங்களில் விஐபிக்கள் மற்றும் பொது நபர்களின் பெயரில் வரும் செய்திகளைப் பகிரும் முன்போ அல்லது நம்பும் முன்போ, அவர்களின் அதிகாரப்பூர்வமாக உள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று சமூக ஊடக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
