அமெரிக்காவில் சொகுசாக வாழ்ந்து கொண்டு, இந்தியாவில் இருக்கும் தனது முன்னாள் கணவரிடம் மாதம் 1 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்ட பெண்ணுக்கு மும்பை உயர்நீதிமன்றம் மிக அதிரடியான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. “வெளிநாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகமாக இருக்கிறது என்பதற்காக, கணவரை விட அதிகமாகச் சம்பாதிக்கும் ஒரு பெண் ஜீவனாம்சம் கேட்க முடியாது” என்று கூறி அந்தப் பெண்ணின் மனுவை நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த வழக்கின் பின்னணியில் ஒரு சுவாரசியமான ட்விஸ்ட் உள்ளது. விவாகரத்து பெற்ற அந்தப் பெண், 2011 முதல் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் வசித்து வருகிறார். பி.சி.ஏ, எம்.சி.ஏ எனப் பெரியப் படிப்புகளைப் படித்துவிட்டு, அங்குள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் மாதம் 8,700 அமெரிக்க டாலர் சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். இது இந்திய மதிப்பில் 8 லட்ச ரூபாய்க்கு மேல் இருக்கும். ஆனால், இந்தியாவில் இருக்கும் அவரது முன்னாள் கணவரோ சாதாரண ஐடி ஊழியர். அதுமட்டுமில்லாமல், தற்போதைய ‘ஏஐ’ தொழில்நுட்ப வளர்ச்சியால் எந்த நேரத்திலும் தனது வேலை பறிபோகலாம் என்ற பயத்திலேயே அவர் காலம் கழித்து வருகிறார்.

நீதிமன்றத்தில் வாதாடிய அந்தப் பெண், “நான் அமெரிக்காவில் எனது இளைய மகனைத் தனியாக வளர்த்து வருகிறேன். அங்கு விலைவாசி மற்றும் வாழ்க்கைச் செலவுகள் மிக அதிகம். அதனால் எனக்குக் கையில் பணம் மிஞ்சுவதே இல்லை. எனவே, முன்னாள் கணவர் எனக்கு மாதம் 1 லட்சம் ரூபாய் தர வேண்டும்” என்று வாதிட்டார். ஆனால், கணவர் தரப்பிலோ, மூத்த மகனை ஆஸ்திரேலியாவில் படிக்க வைப்பதற்கான மொத்த செலவு, வயதான பெற்றோரையும், தனது இரண்டாவது மனைவியையும் கவனிக்கும் முழு பொறுப்பும் தன்னிடம் தான் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பாரதி டாங்ரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய அமர்வு, அந்தப் பெண்ணின் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்தது. இந்து திருமணச் சட்டத்தின்படி, ஜீவனாம்சம் என்பது பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய, தங்களை சுயசார்போடு கவனித்துக் கொள்ள முடியாத கணவர் அல்லது மனைவிக்கு உதவத்தானே தவிர, லட்சங்களில் சம்பாதிக்கும் ஒருவருக்குக் கொடுப்பதற்கல்ல என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். இறுதித் தீர்ப்பாக, அந்தப் பெண்ணுக்கு வழக்குச் செலவிற்காக மட்டும் கணவர் 25,000 ரூபாய் கொடுத்தால் போதும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.