உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் ஹஸ்தினாபூர் பகுதியில் அரங்கேறியுள்ள, ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கிய ‘பாம்பைக் கடிக்க வைத்து கணவனை கொலை செய்த வழக்கு விசாரணையில், தினமும் வெளியாகும் புதிய தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தனியார் பள்ளி தாளாளர் அதுல் குமார், தூக்கத்திலேயே பாம்பு கடித்து உயிரிழந்த விவகாரத்தில், அவரது மனைவியும் பள்ளியின் முதல்வருமான தாமினி மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர் துஷார் ஆகியோரின் கள்ளக்காதல்தான் இந்தக் கொலைக்கு முதன்மைக் காரணம் என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கொல்லப்பட்ட அதுல் குமார் சொந்தமாகப் பள்ளி நடத்தி வந்த நிலையில், அவரது மனைவி தாமினி அதே பள்ளியில் முதல்வராகவும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த துஷார் என்பவர் பேருந்து ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தனர். நாளடைவில் தாமினிக்கும் ஓட்டுநர் துஷாருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரம் கணவர் அதுல் குமாருக்குத் தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அதுல் குமார், ஓட்டுநர் துஷாரை வேலையை விட்டு நீக்குவதாகவும், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். இதனால் தங்களின் கள்ளக்காதல் விவகாரம் ஊருக்குள் தெரிந்துவிடும் என்றும், வேலை பறிபோய்விடும் என்றும் பயந்த கள்ளக்காதல் ஜோடி, அதுல் குமாரை நிரந்தரமாக ஒழித்துக் கட்டத் திட்டமிட்டது.

அதன்படி, அதுல் குமாரைக் கொலை செய்ய கூகுள் மற்றும் பல்வேறு க்ரைம் தொடர்களைப் பார்த்து அவர்கள் விதம் விதமாக ஐடியாக்களைத் தேடியுள்ளனர். முதலில் அதுல் குமாரை ஒரு சாலை விபத்தில் சிக்க வைத்துக் கொல்ல முயன்றனர், ஆனால் அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்தச் சூழலில்தான், பேருந்து ஓட்டுநர் துஷாருக்குத் தனது பக்கத்து கிராமத்தில் ஒரு பெண், தனது கணவனைப் பாம்பைக் கடிக்க வைத்துக் கொன்ற விவகாரம் தெரியவந்துள்ளது. இயற்கை மரணம் போலக் காட்டி போலீஸாரிடம் இருந்து எளிதாகத் தப்பிக்கலாம் என்பதால், அதே பாணியைக் கையாள தாமினியும் சம்மதித்துள்ளார்.

திட்டமிட்டபடி, சம்பவத்தன்று இரவு தாமினி தனது கணவர் அதுல் குமாருக்குச் சாப்பிடும் பாலில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்த அதுல் குமார் மயக்க நிலைக்குச் சென்றதும், வீட்டில் இருந்த தனது குழந்தைகளை யாருக்கும் சந்தேகம் வராதபடி அடுத்த அறைக்குத் தாமினி மாற்றியுள்ளார். பின்னர், நள்ளிரவில் கள்ளக்காதலன் துஷார் பிடித்து வந்த பயங்கர விஷப்பாம்பை அதுல் குமாரின் படுக்கையில் திறந்து விட்டுள்ளனர். அந்த விஷப்பாம்பு கடித்ததில் அதுல் குமார் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மறுநாள் காலையில் இது ஏதோ தற்செயலாக நடந்த விபத்து போல நாடகமாட முயன்ற கள்ளக்காதல் ஜோடியின் சதியை, போலீஸார் தங்களது பாணியில் விசாரித்து தற்போது துகிலுரித்துள்ளனர்.