பீகார் அரசியலில் நிதிஷ் குமார் திடீரென முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும், அங்கு பாஜகவின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதும் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்து ஆட்சியைப் பிடித்தது போல, பீகாரிலும் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சியை பாஜக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்த ‘மாநிலக் கட்சி கபளீகரம்’ செய்யும் உத்தி, தமிழகத்தில் அதிமுகவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் ஒரு எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுகிறது. பாஜக தனது சித்தாந்தத்தை நிலைநிறுத்த பிராந்தியக் கட்சிகளைப் பலவீனப்படுத்தும் என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும், தமிழகக் களம் முற்றிலும் வேறுபட்டது என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

அதிமுக தரப்பைப் பொறுத்தவரை, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலிருந்தே கட்சிக்கு நிலையான வாக்கு வங்கி இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையின் கீழ் கட்சியை இரும்புக்கோட்டையாக வைத்திருப்பதாகவும் நம்புகின்றனர்.

2021 தேர்தலில் திமுகவுக்கு இணையாக அதிமுக வாக்குகள் பெற்றதைச் சுட்டிக்காட்டும் அவர்கள், எடப்பாடி பழனிசாமி இதுவரை எங்கும் விட்டுக்கொடுக்கவில்லை என்கின்றனர். அண்ணாமலையின் வெளியேற்றம், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் குறித்த தெளிவான முடிவுகள் மூலம் இபிஎஸ் தனது பிடியை உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும், பீகார் மற்றும் மகாராஷ்டிரா சம்பவங்கள் எடப்பாடி பழனிசாமியை கூடுதல் கவனத்துடன் இருக்க வைத்துள்ளன. பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தாலும், தொகுதிப் பங்கீடு மற்றும் வெற்றி வாய்ப்புள்ள இடங்களைத் தக்கவைப்பதில் இபிஎஸ் மிகவும் எச்சரிக்கையாகக் காய்களை நகர்த்தி வருகிறார்.

தேர்தலுக்குப் பிறகு பாஜகவின் பிடியில் சிக்காமல் இருக்கவும், அதிமுகவின் தனித்துவத்தை இழக்காமல் இருக்கவும் அவர் ரகசிய வியூகங்களை வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அமித் ஷா மற்றும் மோடியின் பேச்சுகளில் ‘என்டிஏ கூட்டணி ஆட்சி’ என்று குறிப்பிடப்படுவதை உணர்ந்துள்ள இபிஎஸ், தேர்தல் முடிவுகளுக்குப் பின் எந்தவொரு அரசியல் நெருக்கடியையும் சமாளிக்கத் தயாராக ‘அலர்ட்’ ஆக உள்ளார்.