தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி நகரில் கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரே தனது மூன்று பெண் குழந்தைகளையும் ஏரியில் தள்ளி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வரும் இஸ்மாயில் என்பவரது மனைவி சபீனா பணி முடிந்து வீடு திரும்பியபோது தனது மூன்று மகள்களையும் காணவில்லை எனத் திடுக்கிட்டார்.
இது குறித்துக் கணவரிடம் கேட்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் சபீனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் இஸ்மாயிலை பிடித்து விசாரணை நடத்தியபோது பிள்ளைகளுக்குத் தோசை வாங்கித் தர உணவகத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் பின்னர் அவர்கள் காணாமல் போனதாகவும் நாடகமாடினார்.
இருப்பினும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது இஸ்மாயில் கூறிய தகவல்கள் பொய்யெனத் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் இஸ்மாயில் தனது மூன்று மகள்களையும் ஏரியில் தள்ளிவிட்டதாக ஒப்புக்கொண்டார்.
தனக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கும் மேல் கடன் இருந்ததாகவும் அதனால் குழந்தைகளை வளர்க்க இயலாத விரக்தியில் இந்தக் கொடூரத்தைச் செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்ய முயன்று பின்னர் பயந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்மாயிலை கைது செய்த காவல்துறையினர் ஏரியில் இருந்து இரண்டு மகள்களின் உடல்களை மீட்டுள்ளனர்.
காணாமல் போன மூத்த மகளின் உடலைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெற்ற தந்தையே பிள்ளைகளைக் கொன்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
