வரும் ஏப்ரல் மாதம் முதல் தேதி முதல் கிரெடிட் கார்டு பயன்பாடு தொடர்பாகப் பல்வேறு முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. இனிவரும் காலங்களில் புதிய கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும்போது பான் அட்டை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பான் அட்டை இல்லாத விண்ணப்பங்களை வங்கிகள் நிராகரிக்கும் என்பதால் அனைத்துச் செலவுகளும் இனி வரி அமைப்புடன் நேரடியாக இணைக்கப்படும். இதன் மூலம் போலி கணக்குகள் மற்றும் கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படுவது பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஒரு நிதியாண்டில் கிரெடிட் கார்டு வாயிலாக 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ரொக்கமற்ற செலவுகளைச் செய்தாலோ அல்லது ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டாலோ அந்த விவரங்களை வருமான வரித்துறைக்கு வங்கிகள் கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும். இத்தகைய அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் அனைத்தும் வருமான வரித்துறையின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி இனி வருமான வரியும் செலுத்த முடியும் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்காகச் செயலாக்கக் கட்டணம் மற்றும் வட்டி விதிக்கப்பட வாய்ப்புள்ளதால் வாடிக்கையாளர்கள் கவனமுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள். இதேபோல் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கும் கார்டுகளைத் தனிப்பட்ட செலவுகளுக்குப் பயன்படுத்தினால் அந்தத் தொகை ஊழியரின் வருமானமாகக் கருதப்பட்டு வரி விதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே அலுவலகச் செலவுகளையும் தனிப்பட்ட செலவுகளையும் தெளிவாகப் பிரித்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. மற்றொரு முக்கிய மாற்றமாக கடந்த மூன்று மாதங்களுக்குள் பெறப்பட்ட கிரெடிட் கார்டு அறிக்கையை பான் அட்டை விண்ணப்பத்திற்கான முகவரிச் சான்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது கூடுதல் ஆவணங்களின் தேவையைக் குறைத்து பான் அட்டை பெறும் நடைமுறையை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
