மத்திய பிரதேச மாநிலம் சிஹொரி மாவட்டம் தரம்புரி கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கும் அவரது சகோதரர் ஹரிசிங்கிற்கும் இடையே நீண்ட காலமாகச் சொத்து தகராறு நிலவி வந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று காலை ஜெகதீஷின் மகள் சிதல் மற்றும் மகன் குல்தீப் ஆகிய இருவரும் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை வழிமறித்த ஹரிசிங் மற்றும் அவரது மகன் சொத்து விவகாரம் குறித்து மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றவே தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அக்காள் மற்றும் தம்பியை இருவரும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இந்தக் கொடூரமான தாக்குதலில் பலத்த காயமடைந்த சிதல் மற்றும் குல்தீப் ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கல்லூரிக்குச் சென்ற இளம்பெண் மற்றும் அவரது தம்பியைப் படுகொலை செய்த ஹரிசிங் மற்றும் அவரது மகனைப் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். சொத்து ஆசைக்காகச் சொந்த அண்ணன் குழந்தைகளையே சித்தப்பா கொலை செய்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
